தேசிய செய்திகள்

“வீட்டுக் கடனுக்கு காப்பீடு கட்டாயமில்லை”.. வங்கிகளின் கெடுபிடிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

புதுடெல்லி,

நீங்கள் எப்போதாவது வீட்டுக் கடனுக்காக வங்கிக்கு சென்று, நீங்கள் கேட்காத ஒரு காப்பீட்டு திட்டத்துடன் திரும்பி வந்திருந்தாலோ, அல்லது ஒரு வங்கி செயலியைப் பதிவிறக்கம் செய்து, தனிநபர் கடனுக்கான பாப்-அப்பில் சிக்கிக்கொண்டிருந்தாலோ, இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு உங்களுக்காகத்தான்.

இதன்படி வீட்டுக் கடன் பெறும்போது காப்பீடு கட்டாயமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் காப்பீடு உள்ளிட்ட பிற நிதி தயாரிப்புகளை கட்டாயமாக விற்பனை செய்வதைத் தடுக்க 'பொறுப்பான வணிக நடத்தை (இரண்டாவது திருத்தம்) வழிகாட்டுதல்கள், 2026' என்ற புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பொதுவாக, வீட்டுக்கடன் ஒப்புதல் பெற வங்கிகள் தங்களுடன் இணைந்த காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளை வாடிக்கையாளர்களிடம் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இதைத் தடுக்க, 'கட்டாய இணைப்புச் சலுகை' முறைக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

கட னுக்காக காப்பீடு தேவைப்பட்டாலும், வாடிக்கையாளர் தன் விருப்பமான எந்த நிறுவனத்திலிருந்தும் காப்பீடு வாங்கலாம். குறிப்பிட்ட வங்கியின் காப்பீட்டை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. காப்பீடு எடுப்பது கட்டாயம் கிடையாது.

மேலும், வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றும்போது, ஏற்கனவே உள்ள காப்பீட்டை நிராகரித்து புதிய காப்பீடு எடுக்க வற்புறுத்தும் நடைமுறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தனது தற்போதைய காப்பீட்டில் புதிய வங்கியின் பெயரை சேர்த்து அதையே தொடரலாம்.

மேலும் தவறான தகவல்கள் வழங்கி காப்பீடு அல்லது பிற திட்டங்களை விற்பனை செய்வது தவறான விற்பனை' என ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது. இது நிரூபிக்கப்பட்டால், வாடிக்கையாளர் செலுத்திய முழுத் தொகையையும் வங்கி திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் அவருக்கு ஏற்பட்ட இழப்புக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

காப்பீடு விற்பனைக்காக வங்கி ஊழியர்கள் எந்த ஊக்கத்தொகையும் பெறக் கூடாது. வாடிக்கையாளரின் தெளிவான ஒப்புதல் (ஒடிபி அல்லது கையொப்பம்) இல்லாமல் எந்த தயாரிப்பையும் விற்கக் கூடாது. இந்த புதிய விதிமுறைகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.