கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் 2026 சட்டசபை தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்பார்வையிட்ட நிலையில், தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மேற்கு வங்காள தேர்தலை பா.ஜ.க.வும் ஞானேஷ்குமாரும் இணைந்து கொள்ளையடித்துள்ளனர். உங்களுக்கு தார்மீக பலம் இருந்தால் எங்களது தேர்தலை திருப்பிக் கொடுங்கள். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்து, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
2026-ம் ஆண்டு மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 207 தொகுதிகளிலில் வென்று ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளில் மட்டுமே வென்றது. பெரும்பான்மைக்கு 147 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், பா.ஜ.க. அதை எளிதாக பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மேற்கு வங்காள தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மம்தா பானர்ஜி முன்வைத்துள்ளார்.
இதற்கிடையே, தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் ஒருமனதாகவே பிறப்பிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது