தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் ரெட் அலர்ட்; 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

வெள்ளம் சூழ்ந்த சாலைகளிலோ அல்லது பாலங்களின் மீது வெள்ளநீர் ஓடும்போது அதனை கடந்து செல்ல முயற்சிக்கவோ வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

சிம்லா

இமாசல பிரதேசத்தில் கனமழையை முன்னிட்டு 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி மையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரெட் அலர்ட்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இமாசல பிரதேசத்தின் சம்பா, காங்ரா, குலு, மாண்டி மற்றும் சிர்மார் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, காங்ரா, மாண்டி மற்றும் சிர்மார் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி மையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் மாலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்து வருகிறது. இன்று அதிக அளவில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. நாளையும் கனமழை பெய்யும்.

நிலச்சரிவு

தொடர் மழையால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் மண் மூடி காணப்படுகிறது. இதனால், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவற்றை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை அடுத்து, நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேகவெடிப்பு ஏற்பட கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, அவசரகால செயல்பாட்டு மையங்களை மாவட்ட அளவில் அமைக்கும்படி, துணை ஆணையாளர்கள் அனைவருக்கும் தலைமை செயலாளர் கம்லேஷ் குமார் உத்தரவிட்டு உள்ளார்.

பொதுமக்கள் தேவையின்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளிலோ அல்லது பாலங்களின் மீது வெள்ளநீர் ஓடும்போது அதனை கடந்து செல்ல முயற்சிக்கவோ வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.