தேசிய செய்திகள்

எண்ணெய் பயன்பாட்டை குறையுங்கள்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

140 கோடி மக்களின் நலன் சார்ந்த இந்தப் பிரச்சினையில் சுயநல அரசியலுக்கு இடமில்லை என்று மோடி கூறினார்.

பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசியதாவது:

மேற்கு ஆசியாவில் கடந்த ஒரு மாதமாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் எரிசக்தி தேவையில் மேற்கு ஆசியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் தொடர்பாக நெருக்கடி உருவாகியுள்ளது.இந்தியாவின் சர்வதேச உறவுகள், பல்வேறு நாடுகளின் ஆதரவு மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் நாம் உருவாக்கிய வலிமை ஆகியவை இந்தச் சூழலை எதிர்கொள்ள உதவுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தைப் போலவே இந்த நெருக்கடியையும் இந்தியா வெற்றிகரமாகக் கடந்து வரும்.

வளைகுடா நாடுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் வளைகுடா நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். 140 கோடி மக்களின் நலன் சார்ந்த இந்தப் பிரச்சினையில் சுயநல அரசியலுக்கு இடமில்லை. வதந்திகளைப் பரப்புவோர் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வதந்திகளை நம்பாமல், அரசு தொடர்ந்து வெளியிடும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்.

நாட்டின் பல பகுதிகளில் குளிர்காலம் துவங்கியதால் மக்கள் அனைவரும் தங்களது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். உணவு பொருட்களில் பயன்படுத்தும் எண்ணெய் பயன்பாட்டை மக்கள் 10% குறைக்க வேண்டும். பெரிய சவாலாக இருந்து வரும் உடன் பருமன் பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். நல்ல ஆரோக்கியத்தை பேணுவதற்கு மக்கள் தங்கள் உணவுப் பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT