புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கார்கே தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பீகார் மாநிலம் பாட்னாவில், பீகாரின் முதல்-மந்திரியாக இருந்த ஸ்ரீகிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், பிரதமர் மோடி எங்கும் செல்ல மாட்டார் என அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார். இதனால், கோபமடைந்த கார்கே, மோடி மட்டுமல்ல, அவரது அப்பாவும் செல்வார் என ஆவேசமாகக் கூறினார்.
பிரதமர் மோடியின் மறைந்த தந்தை குறித்து ஒருமையில் பேசுவதா? என பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்தது. கார்கேவின் பேச்சை கண்டித்து பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லி, பாட்னா, ஜம்மு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்னாவில் நடைபெற்ற பேரணியின்போது கார்கேவின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. டெல்லியில் கார்கேவின் இல்லத்தை நோக்கிச் செல்ல முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், கார்கேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக அதனை நியாயப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியும் கார்கேவையும் காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்தார். பிரதமரைப் பற்றி தனிப்பட்ட முறையில் பேசுவது அரசியல் நாகரிகத்துக்கு எதிரானது என்று பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கார்கேவின் மகனும் கர்நாடக மந்திரியுமான பிரியங்க் கார்கே, பா.ஜ.க. தேவையற்ற விவகாரங்களைப் பெரிதுபடுத்துவதாகக் குற்றம்சாட்டினார். கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைவர்களைப் பற்றி பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்த கருத்துகளையும் அவர் சுட்டிக்காட்டினார். ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜாவும், அரசியல் தலைவர்களின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சிக்க்கு ஆதரவான கருத்துகளை வெளிப்படுத்தினார்.