தேசிய செய்திகள்

முஸ்லிமாக மாறியவருக்கான இடஒதுக்கீடு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்ததை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

முஸ்லிமாக மாறியவர் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஐகோர்ட்டில் வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சமீர் அகமது, மதுரை ஐகோர்ட்டில் 2022-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், 2015-ம் ஆண்டில் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன். இதனால் இந்த மாற்றத்தை ஏற்று என்னுடைய சாதிச்சான்றிதழில் முஸ்லிம் லெப்பை என மாற்றித்தருமாறு தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். ஆனால் என்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார். அதனை ரத்து செய்து எனக்கு முஸ்லிம் லெப்பை என்ற பிரிவினருக்கான சாதிச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் விசாரித்து கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி தீர்ப்பு கூறினர்.

ஏற்புடையதல்ல

அந்த தீர்ப்பில், கூறியிருப்பதாவது:-

வேறுமதத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட பிரிவினர் முஸ்லிம் மதத்துக்கு மாறினால் மேற்கண்ட 7 பிரிவுகளில் ஒன்றை சேர்ந்தவர் என்று சாதிச்சான்றிதழ் வழங்கலாம் என்று அரசு உத்தரவிட்டது.

இத்தகைய நிலைப்பாடு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பதுதான் இங்கு முக்கிய கேள்வியாக எழுகிறது. இஸ்லாத்திற்கு மதம் மாறுபவர் ஒரு 'முஸ்லிம்' மட்டுமே ஆகிறார் என்று ஏற்கனவே ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து இருந்தது.

அந்த தீர்ப்பை வலுவிழக்கச்செய்யும் வகையில் தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிடுவது ஏற்புடையதல்ல. 'பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள்' என அடையாளம் காணப்பட்ட முஸ்லிம்களின் 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுக்கு மதம் மாறலாம் என்பதை அரசு அங்கீகரித்து இருப்பதும் ஏற்புடையதல்ல.

சாதிச்சான்றிதழ்

அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது என்ற முடிவுக்கு வருகிறோம். அந்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. செல்லாது என்று நாங்கள் அறிவிக்கிறோம். அதன்படி மனுதாரருக்கு முஸ்லிம் லெப்பை என சாதிச்சான்றிதழ் வழங்க முடியாது என தூத்துக்குடி தாசில்தார் நிராகரித்தது சரிதான்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பா.கருணாகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, சந்திரசேகர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தீர்ப்பு கூறியது. அதில் ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்ததோடு, முஸ்லிமாக மாறியவர் இடஒதுக்கீடு கோர முடியாது என்று உத்தரவிட்டது.

மறுஆய்வு

இந்நிலையில், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பா.கருணாகரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT