பெங்களூரு,
மத்திய அரசு கடந்த மாதம் 26-ந் தேதி சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க எத்தனால் தயாரிக்க கட்டுப்பாடுகளை விதித்தது.. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு தனியார் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி சி.எம்.பூனச்சா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததை அடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க தனி நீதிபதி மறுத்துவிட்டார். முன்னதாக மத்திய அரசு வக்கீல் வாதிடுகையில், “கரும்பு உற்பத்தி, தற்போது சந்தையில் சர்க்கரை இருப்பு பற்றாக்குறையை கவனத்தில் வைத்து மத்திய அரசு எத்தனால் உற்பத்திக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், “எத்தனால் தயாரிக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பொருளாதார இழப்பு ஏற்படும். தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரினார். நாட்டில் நிலவும் சர்க்கரை தட்டுப்பாடு மற்றும் 2026-27-ம் ஆண்டுக்கான கரும்பு உற்பத்தி கணிப்புகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசின் நடவடிக்கையைவிட தனியார் நிறுவனங்களின் வணிக நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.