தேசிய செய்திகள்

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட 39 மருந்துகளின் சில்லரை விலைக்கு வரம்பு நிர்ணயம்

ரேபிஸ் ஊசி மருந்தின் சில்லரை விலை ஒரு ஊசிக்கு ரூ.119.48 என ஆக்கப்பட்டு இருக்கிறது.

புதுடெல்லி,

தேசிய அளவில் மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில், நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளின் சில்லரை விலையில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலான விலை நிர்ணயத்தை செய்துள்ளது. இந்த வகையில் 39 மருந்துகளுக்கு சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இதன்படி உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஆம்லோடிபைன் பிசோப்ரோலோல் டெல்மிசார்டன் என்ற மாத்திரையில் ஒரு மாத்திரையின் விலை ரூ.14.74 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கப் பயன்படும் குளோபிடோக்ரெல் ஆஸ்பிரின் அடோர்வாஸ்டாடின் கேப்ஸ்யூல்கள், ஒரு கேப்ஸ்யூலுக்கு ரூ.6.37 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ரேபிஸ் ஊசி மருந்து

கால்சியம்-வைட்டமின் டி மாத்திரையில் சில்லரை விலை ஒரு மாத்திரைக்கு ரூ.8.93 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரேபிஸ் ஊசி மருந்தின் சில்லரை விலை ஒரு ஊசிக்கு ரூ.119.48 என ஆக்கப்பட்டு இருக்கிறது.

விலை நிர்ணயம்

மருத்துவ அவசரநிலைகளின்போது தீங்கு விளைவிக்கும் ரத்தக் கட்டிகளைக் கரைக்கப் பயன்படுத்தப்படும். டெனெக்டெப்லேஸ் ஊசி மருந்துக்கு (ஒரு குப்பி) ரூ.60,238.27 என விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2-வது வகை நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் எம்பாக்லிப்ளோசின், சிட்டாகிளிப்டின் மற்றும் மெட்பார்மின் மாத்திரைகளில் ஒரு மாத்திரைக்கு ரூ.14.88 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.