ஐதராபாத்,
அமெரிக்கா, இங்கிலாந்து சீனா உள்ளிட்ட பல நாடுகளில் சூதாட்டங்கள் சட்டபூர்வமாக உள்ளது. இந்தியாவில் அனைத்து வகையான சூதாட்டங்களும் சட்ட விரோதம் என அறிவித்து தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இவை சட்டவிரோதமாக நடைபெறுகிறது. இந்தியாவில் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் தொடர்பான செய்திகள் வெளியாவதும், போலீஸ் நடவடிக்கை எடுப்பதும் தொடர் கதையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஐபிஎல் சூதாட்டத்தில், வீரர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என பலருடைய பெயர் அடிப்பட்டது.
விளையாட்டை வைத்து நடத்தப்படும் சூதாட்ட பந்தயங்களை சட்டபூர்வமாக்கலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.
சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கி வரி விதித்து அதன் மூலம் அரசு வருவாய் ஈட்டலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் சூதாட்டத்தை தடை செய்துள்ள போதிலும், வெளியில் தெரியாமல் நடைபெறும் சூதாட்டத்தில் பல கோடி ரூபாய் பணம் கை மாறுகிறது. இதன் மூலம் சட்டவிரோத பணிபரிமாற்றம், போதைப் பொருள் கடத்தல், தீவிரவாதம் உள்ளிட்டவை வளர்ச்சி அடைகின்றன. இதனை கட்டுப்படுத்த எவ்வளவோ நடவடிக்கை எடுத்து வருகின்றபோதிலும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் சட்டவிரோத கும்பல்கள் மட்டுமே பணம் சம்பாதிக்கின்றன. எனவே இந்த சூதாட்டத்தை சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும்.
சூதாட்டத்திற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். பான் எண், ஆதார் எண் உள்ளிட்டற்றை கட்டாயமாக்கலாம்.
பண பரிவர்த்தனையை ஆன்லைன் மூலம் மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கலாம். மேலும் சூதாட்டத்திற்கு வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கலாம். இதன் மூலம் அரசிற்கு வருவாயும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வரி வருவாயை பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என சட்ட ஆணையம் சிபாரிசு செய்து உள்ளது.
இந்நிலையில் சூதாட்டத்தைப் போல் விபசாரத்தையும் சட்டபூர்வமாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி யோசனை கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான என்.சந்தோஷ் ஹெக்டே பேசுகையில், சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க செய்யப்பட்டது நல்ல சிபாரிசு. சட்டவிரோத சூதாட்டம் ஆங்காங்கே நடந்து வருகிறது. எனவே, அதை சட்டபூர்வமாக்கும்போது, 75 சதவீத சட்டவிரோத சூதாட்டங்கள் நின்று விடும். சில தீய பழக்கங்களை சட்டத்தால் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைப்பவர்கள், முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்வதாக அர்த்தம். அப்படி கட்டுப்படுத்த நினைத்தால், அது சட்டவிரோதமாக நடப்பது பெருகும். மதுவிலக்கு விஷயத்தில் அதை நாம் பார்த்துள்ளோம்.
விபசாரத்தையும் சட்டபூர்வமாக்கலாமா? என்று கேட்டால், ஆம் என்றே சொல்வேன். விபசாரம் எல்லா இடத்திலும் நடக்கிறது. அதை சட்டபூர்வமாக்கி, அத்தொழிலில் உள்ளவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்தால், விபசாரம் கட்டுப்பாட்டுக்குள் வரும் என கூறியுள்ளார்.