காந்திநகர்,
2030-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆய்வு செய்தார். அத்துடன் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் விருப்பம் (bid) குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, குஜராத் துணை முதல்-மந்திரி ஹர்ஷ் சங்கவி ஆகியோரும் பங்கேற்றனர். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பதிவிட்டுள்ளதாவது;-
“சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு மையமாக மாற்றுவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில், 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் விண்ணப்பம், 2029-ம் ஆண்டுக்கான காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை விளையாட்டுப் போட்டிகள் (Police and Fire Games) மற்றும் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தேன்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விளையாட்டுப் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற செயல்பாட்டு நடைமுறைகளை கண்காணிப்பதில் உள்துறை அமைச்சகம் முக்கியப் பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் இந்தியாவுக்கு வர உள்ளன. இந்த முறை அகமதாபாத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன. முன்னதாக 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.