ஐதராபாத்,
ஆந்திரத்தில் மின் ரம்பத்தால் பள்ளி மாணவியை தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ் நடத்திய என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம் செய்யப்பட்டுள்ளது
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள 10-ம் வகுப்பு ஒன்றில் கடந்த சனிக்கிழமை காலை பாடவேளை நடந்து கொண்டிருந்தது. மாணவ, மாணவிகள் ஆசிரியர் பாடம் நடத்து வதை கவனித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் திடீரென மரம் அறுக்கும் எந்திரத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். அவர் யார் என்று ஆசிரியர் கேட்டார்.
அதற்குள் அந்த வாலிபர், வகுப்பறையில் உள்ள சிறுமி ஒருவரை மின்சார ரம்பத்தால் தாக்கினார். இதில் அந்த மாணவி ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். அவரை காப்பாற்ற சக மாணவி ஒருவர் முயன்றார். ஆனால் அவரையும் அந்த வாலிபர் தாக்கினார். இதில் இரு மாணவிகளும் படுகாயம் அடைந்தனர்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் வகுப்பறையை விட்டு அலறியபடி வெளியே ஓடி வந்தனர். இதனால் வகுப்பறையே போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த கொடூர தாக்கலில் ஈடுபட்ட அந்த வாலிபரை அனைவரும் விரட்டிச்சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தை பார்த்த சக மாணவ, மாணவிகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதற்கிடையே ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த 2 மாணவிகளையும் ஆசிரியர்களும், ஊழியர்களும் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதில் முதலில் தாக்குதலுக்கு ஆளான மாணவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்றொரு மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியை தாக்கிய வாலிபர் பெயர் ஹேமந்த் என்கிற சம்மு (வயது 21) என்பதும், அவர் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் தர்மவரம் நாகலூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
கவலைக்கிடமாக உள்ள மாணவி ஹேமந்துக்கு உறவினர் என்பதும், ஹேமந்த் மாணவியை ஒரு தலையாக காத லித்து வந்ததாக தெரியவந்தது. பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவியை கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு ஆறுதல் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய ஹேமந்த் பள்ளியில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அதன்பின்னர், ஆத்மக்கூர் வனப்பகுதிக்குத் தப்பிச் சென்ற ஹேமந்தை காவல்துறையினர் அவரைக் கண்டுபிடித்தனர்.
ஆனால் அவர் வட்ட ஆய்வாளர் வெங்கடேஸ்வரலுவை கத்தியால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், போலீஸ் அதிகாரிகள் ஹேமந்தை தற்காப்புக்காகச் சுட்டதில், அவரது இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன் அவர் அனந்தபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரைப் பிடித்ததில் ஹேமந்தின் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ரத்த ஓட்டம் பாதித்து திசுக்கள் அழுகத் தொடங்கியதால் அவரை வலது காலை அனந்தபூர் அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் அகற்றியுள்ளனர். அவருக்கு மற்றொரு காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.