தேசிய செய்திகள்

சபரிமலையில் அரவணை பிரசாதம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அரவணை பிரசாதம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசனில் அரவணை பிரசாதம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது. மேலும் இதுதொடர்பாக அந்த சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முன்னேற்பாட்டில் குளறுபடி

மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய அத்தியா வசிய ஏற்பாடுகளையும், முன் கூட்டியே முடிக்க வேண்டியதன் அவசியத்தையும் திருவிதாங் கூர் தேவஸ்தான வாரியத்திற்கு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல மாதங்களுக்கு முன்பே அறிவுறுத்தி வந்தோம்.

அதாவது ஏல நடவடிக்கைகளை முன் கூட்டியே நடத்துவது. அரவணைக்கு தேவையான நெய் உள்பட பொருட்களின் கொள்முதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல். ஆடம்பர செலவுகளை தவிர்த்து அத்தியாவசிய செலவு திட்டங்களை முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துதல், தேவஸ்தான ஊழியர்களின் உணவு கூடத்தை மேம்படுத்துதல்,முதல்-மந்திரியின் உத்தரவின் அடிப்படையில் சீசனுக்கு முன்னதாக 75 லட்சம் டின் அரவணை கையிருப்பு உள்பட பல்வேறு அடிப்படை செயல் திட்டங்கள் தொடர்பாக தேவஸ்தான தலைவருக்கு அடிக்கடி நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டால் ஒட்டு மொத்த சீசன் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அரவணை பிரசாதம் தட்டுப்பாடு

இதுதொடர்பாக முதல்-மந்திரி வி.டி.சதீசன், தேவஸ்தான மந்திரி முரளீதரன் மற்றும் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் இதுதொடர்பாக முன்னேற்பாடுகள் எதையும் செய்யவில்லை. இதனால் நெய் கொள்முதல் உள்பட எந்த நடவடிக்கைக்கும் டெண்டர் நடவடிக்கைகள் பூர்த்தியாகவில்லை. மேலும் அரவணை தயாரிப்பு ஆலை மேம்பாட்டு பணிகளும் முடியவில்லை. இதனால் அரவணை உற்பத்தி பாதியளவில் மட்டுமே உள்ளது. இதனால் நடப்பு சீசனில் அரவணை தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. வர இருக்கும் மண்டல மகர விளக்கு சீசனில் ஏற்படும் குளறுபடிகளுக்கு தேவஸ்தான ஊழியர்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தேவஸ்தானம் மறுப்பு

ஆனால் நடப்பு சீசனில் அப்பம், அரவணை தட்டுப்பாடு இருக்காது என தேவஸ்தான தலை வர் கே. ஜெயக்குமார் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் டெண்டர் நடவடிக்கை உள்பட பல்வேறு செயல்பாடுகளில் தேவஸ்தான ஊழியர்களின் ஒத்துழைப்பு கவலை அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT