தேசிய செய்திகள்

சாலை பள்ளத்தால் நிகழ்ந்த விபரீதம்: தனியார் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

சாலையில் தண்ணீர் நிரம்பிய பெரிய பள்ளத்தில் இறங்கியது. இதனால் ஸ்கூட்டர் சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது.

ஒயிட்பீல்டு,

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் காந்தா (வயது 46). இவருக்கு திருமணமாகி நேஹா என்ற மகள் உள்ளார். இந்தநிலையில் நேற்று காலையில் காந்தா தனது மகளை கல்லூரிக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றார்.

விபத்து

அப்போது அவர்கள் மாரத்தஹள்ளியில் இருந்து சித்தாப்புரா நோக்கி சென்று கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் மாலையில் பெய்த மழையால் சாலை பள்ளங்கள் அனைத்தும் தண்ணீரால் நிரம்பியிருந்தது. இந்தநிலையில் காந்தா மற்றும் அவரது மகள் நேஹா சென்ற ஸ்கூட்டர், எதிர்பாராதவிதமாக திடீரென சாலையில் தண்ணீர் நிரம்பிய பெரிய பள்ளத்தில் இறங்கியது. இதனால் ஸ்கூட்டர் சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது.

உயிரிழப்பு

இதில் காந்தாவும், அவரது மகளும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பள்ளி பஸ் ஒன்று காந்தா மீது ஏறி, இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேஹா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ஒயிட்பீல்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.