தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக ரோகித் ஜெயின் நியமனம்

மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

புதுடெல்லி

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பதவி வகித்த ரபி சங்கர் பதவி காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இதனால், அந்த பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், ரோகித் ஜெயின் 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அவர் இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக பதவி வகித்து வரும் நிலையில், மே 3-ந்தேதி முதல் அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த பதவியில் அவர் நீடிப்பார். மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

1934-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்ட பிரிவுகளின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கியானது, 1935-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தனியார் வங்கியாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1949-ம் ஆண்டு அது தேசியமயம் ஆக்கப்பட்டது.

தொடக்கத்தில் கொல்கத்தா நகரில் இதன் மத்திய அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதன்பின்னர் 1937-ம் ஆண்டு மும்பை நகருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் மும்பையில் இருந்து செயல்பட்டு, கொள்கை முடிவுகளை உருவாக்கி வருகிறார்.