திருப்பதி,
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதியை உறுதி செய்யும் வகையில், குறிப்பாக தற்போது நடந்து வரும் கோடை விடுமுறையில் தங்கும் வசதி, ஓய்வு அறைகள், உடைமைகள் வைப்பறை சேவைகள், குளியல் அறை வசதிகள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் என பரந்த அளவிலான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
திருமலையில் மொத்தம் 7,800 தங்கும் அறைகளே தற்போது பயன்பாட்டில் உள்ளன. பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க இட பற்றாக்குறை உள்ளது. அதன் விளைவாக, தங்கள் குடும்பத்துடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறை ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தனி நபருக்கோ அல்லது திருமணம் ஆகாத ஜோடிகளுக்கோ அறைகள் வழங்கப்பட மாட்டாது.
தங்கும் அறைகளை பெற இயலாத பக்தர்களின் நலன் கருதி, திருமலையில் 5 பிரத்யேக பக்தர்களுக்கான வசதி வளாகங்களை (அமைனிட்டி காம்ப்ளக்ஸ்) தேவஸ்தானம் அமைத்துள்ளது. இந்த மையங்களில், பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டை, தொலைப்பேசி எண்ணை பதிவு செய்து, இலவச உடைமைகள் வைப்பறை வசதி மற்றும் பிற அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.