புதுடெல்லி,
இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த கன்டெய்னர் உற்பத்தி சூழலை உருவாக்க, கன்டெய்னர் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 2039-40 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ் வட்டி மானியமாக ரூ.859 கோடியும், செயல்பாட்டு செலவு உதவியாக ரூ.8 ஆயிரத்து 891 கோடியும் வழங்கப்பட உள்ளது. மேலும், சோதனை மற்றும் சான்றிதழ் உதவி மற்றும் நில குத்தகை ஆதரவு ஆகியவையும் இந்த திட்டத்தின் முக்கிய கூறுகளாக உள்ளன. புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கும், ஏற்கனவே உள்ள ஆலைகளை விரிவுபடுத்துவதற்கும் இது உதவும்.
இதன் மூலம் ஆண்டுக்கு 7.5 லட்சம் டி.இ.யு. அளவுக்கு உற்பத்தித் திறனை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 3 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும். மத்திய பட்ஜெட் 2026-27-ல் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், இந்தியாவை கன்டெய்னர் ஏற்றுமதி மையமாக மாற்ற வழிவகுக்கும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.