தேசிய செய்திகள்

ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் ரூ.2½ லட்சம் தங்கநகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

உப்பள்ளி அருகே, ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் ரூ.2½ லட்சம் தங்கநகை, வெள்ளிப்பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் நவநகர் பகுதியில் அத்யாபாக்நகர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மா. இவர், ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி நரசிம்மா, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் யாரோ மர்மநபர்கள், நரசிம்மா வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் மர்மநபர்கள், வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த தங்கநகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பட்டு சேலைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். நேற்று காலை வீட்டிற்கு வந்த நரசிம்மா மற்றும் குடும்பத்தினர் வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அமைடந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பீரோ திறந்து கிடந்து அதில் இருந்த தங்கநகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பட்டுசேலைகள் திருட்டு போய் உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். அப்போது தான் அவர்களுக்கு, மர்மநபர்கள் வீட்டில் புகுந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.