தேசிய செய்திகள்

யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு - வனத்துறை அறிவிப்பு

துபாரே யானைகள் முகாமிற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டம் இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுகிறது. கூர்க் என அழைக்கப்படும் இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் முக்கியமானது துபாரே யனைகள் பயிற்சி முகாம். குஷால் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த முகாமில் அட்டகாசம் செய்யும் யானைகள் பிடிக்கப்பட்டு கும்கிகளாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள யானைகள் உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவிலும் பங்கேற்று வருகிறது. காவிரி ஆற்றங்கரையில் உள்ள இந்த முகாமில் உள்ள கும்கி யானைகளை காலையில் சுற்றுலா பயணி கள் குளிப்பாட்டி மகிழவும் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிறுவர்கள், பெரியவர்கள், வெளிநாட்டினருக்கு தனித்தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் யானைகள் மீது அமர்ந்து சவாரி செய்யும் வசதியும் உள்ளது.

இத்தகைய புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமிற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடை விடுமுறை என்பதால் கர்நாடகம் மட்டு மின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பய ணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

அதுபோல் நேற்றும் துபாரே யானைகள் முகாமிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். காலை 10 மணி அளவில் கும்கி யானைகளை சுற்றுலா பயணிகள் குளிப்பாட்ட ஒவ்வொரு யானைகளையும் காவிரி ஆற்றுக்குள் இறக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள். பாகன்கள் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் மார்த்தண்டா என்ற பெண் யானை ஆற்றுக்குள் இறக்கப்பட்டது. அது தண்ணீரில் விளையாடிய படி இருந்துள்ளது. இதை பார்த்த ஒரு தம்பதி. தங்களது குழந்தையுடன் மார்த்தண்டா யானை அருகில் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் மார்த் தாண்டா யானை அருகிலேயே கஞ்சன் என்ற ஆண் யானையை தண்ணீருக்குள் பாகன்கள் இறக்கியுள்ளனர். அப்போது திடீரென்று கஞ்சன் யானை ஆக்ரோஷமாகி, மார்த்தண்டாவை தாக்கியது. பதிலுக்கு மார்த்தண்டா, கஞ்சனை தாக்கியது.

இரு யானைகள் இடையே மோதல் உருவானது. இதனால் சுற்றுலா பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதில் நிலைத்தடுமாறி மார்த்தண்டா யானை ஆற்று நீருக்குள் விழுந்தது. நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தில் யானையின் அடியில், புகைப்படம் எடுத்த தம் பதி, குழந்தையுடன் சிக்கினர். இதில் அதிர்ஷ்டவசமாக குழந்தையை கையில் வைத்திருந்த கணவர் மேலே எழுந்து உயிர் தப்பினார். ஆனால் அவரது மனைவி வசமாக மார்த்தண்டா யானையின் அடியில் சிக்கினார்.

இதை பார்த்த கணவர், தனது மனைவியின் கையை பிடித்து இழுத்தார். இருப்பினும் கஞ்சன் யானை, மார்த்தண்டாவை தாக்கியப்படி இருந்தது. ஒரு வழியாக கணவர், மனைவியை இழுத்து மீட்டார்.

இதில் யானையின் அடியில் சிக்கி அந்த பெண்ணின் தலை ஆற்றில் இருந்த பாறைகளில் மோதியுள்ளது. இதனால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடி னார். உடனே அவர் குஷால் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்து அவரது கணவர் கண்ணீர்விட்டு கதறி அழுதார். இது காண்போரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், துபாரே யானைகள் முகாம் வனத்துறை அதிகாரிகள், குஷால் நகர் புறநகர் போலீசார் விரைந்து சென்று விசாரணைநடத்தினர்.

விசாரணையில், பலியான பெண் தமிழ்நாடு சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜூன்ஸி (வயது 33) என்பதும். இவர் தனது கணவர் ஜோயல், பெண் குழந்தையுடன் துபாரே யானைகள் முகாமிற்கு வந்ததும், அப்போது யானை விழுந்து அமுக்கியதில் ஜூன்ஸி இறந்துபோனது தெரியவந்தது.

இதுகுறித்து ஜோயல் நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறுகையில், சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நாங்கள், குழந்தையுடன் துபாரே யானைகள் முகாமிற்கு வந்தோம். நாங்கள் ஒரு யானை முன்பு நின்று குடும்பமாக புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தோம். அப்போது மற்றொரு யானை, எங்கள் அருகே நின்ற யானையை தாக்கியது. இதில் ஒரு யானை கீழே விழுந்தது. இதன் அடியில் சிக்கி எனது மனைவி உயிரிழந்துவிட்டார்.

இங்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மேலும் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை. யானையின் அடியில் சிக்கி காயமடைந்த எனது மனை விக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்கவில்லை. தற்போது எனது மனைவி எங்களுடன் இல்லை எனக் கூறி உருக்கமாக கூறினார்.

சுற்றுலா வந்த இடத்தில் சென்னை பெண் யானையின் அடியில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த ஜூன்ஸி, யானையின் அடியில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை யும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகத்திலும் ஜூன்ஸியின் கணவர் ஜோயல் தனது மனைவியின் கண்களை தானமாக கொடுப்பதாக கூறினார். இதையடுத்து அவரது கண் கள் அறுவை சிகிச்சை செய்து தானமாக பெறப்பட்டது. சுற்றுலா வந்த இடத்தில் கும்கி யானை கள் மோதிக்கொண்டதில், ஒரு யானை விழுந்து அமுக்கியதில் மனைவி பலியான துயரத்திலும் மனைவியின் கண்களை கணவர் தானமாக வழங்கிய சம்பவம் நெஞ்சை உருக்குவதாக உள் ளது. தனது மனைவி உலகை விட்டு சென்றாலும், தன்னுடைய மனைவியின் கண்கள் மூலம் மற்றவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து உலகை காண வேண்டும் என எண்ணிய கணவரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில், துபாரே யானைகள் முகாமில் யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில வனத்துறை அறிவித்துள்ளது.