தேசிய செய்திகள்

ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றச்சாட்டு பதிவு

இவ்வழக்கில் டெல்லி போலீசாரும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளன.

புதுடெல்லி,

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர், 2017-ம் ஆண்டு கைது செய்யப் பட்டு, டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே, மத்திய அரசு உயர் அதிகாரிகள் போல், செல்போனில் பேசி பெரும் பணக்காரர்களிடம் பணம் கேட்டு மிரட்டினார். அதிதிசிங் என்ற பெண், தங்கள் குடும்பத்தினரிடம் ஏராளமான பணத்தை சுகேஷ் சந்திரசேகர் பறித்ததாக புகார் அளித்தார்.

மொத்தம் ரூ.217 கோடி பறித்ததாக தெரிகிறது. அதன்பேரில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் டெல்லி போலீசாரும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளன. பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திர சேகரிடம் இருந்து ஆடம்பர பரிசுப்பொருட்களை பெற்றது தெரிய வந்ததால், அவரும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று டெல்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி பிரசாந்த் சர்மா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட 17 பேர் மீது நீதிபதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். இதற்காக 17 பேரும் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்கள் தாங்கள் குற்றவாளி அல்ல என்று தெரிவித்தனர்.