தேசிய செய்திகள்

3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

நான்காவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.40,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு கூறினார்.

அமராவதி,

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை சரிவடைந்து வருகிறது. குறிப்பாக குறைந்து வரும் பிறப்பு விகிதம், மாநில அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைச் சரிசெய்ய, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஆந்திராவில் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு;

"ஒரு காலத்தில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நான் ஆதரித்திருந்தாலும், தற்போது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளேன். மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.30,000 மற்றும் நான்காவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.40,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் இளம் தொழிலாளர்களின் பற்றாக்குறையைத் தவிர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில தம்பதிகள் ஒரே ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். மற்றவர்கள் தங்கள் முதல் குழந்தை ஆண் குழந்தையாக இல்லாவிட்டால் மட்டுமே இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் தேர்வு செய்கிறார்கள். குழந்தைகள் ஒரு சுமை கிடையாது. குழந்தைகள் நமது சொத்து. ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் என்ற கருவுறுதல் விகிதம் இருக்கும்போதுதான் ஒரு நாட்டின் மக்கள்தொகை நிலையாக இருக்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டாவது குழந்தை பெறும் தம்பதிகளுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக கடந்த மார்ச் மாதம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தில் தெரிவித்து இருந்தார். இந்த திட்டத்தைத் தொடர்ந்து 3-வது மற்றும் 4-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்து சந்திரபாபு நாயுடு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.