தேசிய செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.3.71 கோடி தங்கம் பறிமுதல்: ஊழியர் உள்பட 3 பேர் கைது

இந்த நிலையில் விமானங்களில் பெங்களூருவுக்கு தங்கம் கடத்தப்பட்டுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

தேவனஹள்ளி,

கெம்பேகவுடா விமான நிலையத்தில் 2.75 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக ஊழியர் உள்பட 3 பேரை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கெம்பேகவுடா விமான நிலையம்

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம், போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதை தடுக்க சுங்கவரித்துறை, வருவாய்புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விமானங்களில் பெங்களூருவுக்கு தங்கம் கடத்தப்பட்டுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்படி அவர்கள் விமானங்களில் வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

தங்கம் பறிமுதல்

அப்போது சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் பெங்களூருவுக்கு வந்து துபாய் செல்ல இருந்த முகமது அகில், துபாயில் இருந்து பெங்களூரு வழியாக மாலத்தீவுக்கு செல்ல வந்த முகமது நசீர் ஆகியோர் தங்களது உடைமைகளில் பதுக்கி தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் 2 கிலோ 750 கிராம் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3.71 கோடி ஆகும். இதையடுத்து 2 பயணிகளையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்.

ஊழியரும் கைது

இவர்கள் 2 பேரும் கெம்பேகவுடா விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை மைய ஊழியரான எபின் ஜோசிடம் கடத்தல் தங்கத்தை ஒப்படைக்க இருந்ததும், அதற்கு முன்னதாக 2 பேரும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து ஊழியர் எபின் ஜோசை அதிகாரிகள் கைது செய்தனர். கைதான 3 பேரிடமும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT