தேசிய செய்திகள்

புதுச்சேரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு பெட்டகம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

9, 10-ம் வகுப்பு மாணவர்கள் 16,250 பேருக்கு இலவச டேப்லெட்டுகள் வழங்கப்படும்.

புதுச்சேரி

புதுச்சேரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு பெட்டகம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான ரூ.14,300 கோடி பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். இதில் புதிய வரி விதிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:- ரேஷன் கடைகளில் அரிசியுடன் கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

இலவச பஸ் வசதி

பாண்லே பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 வரை உயர்த்தப்படும். 1,000 மீனவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவன மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி அளிக்கப்படும்.

டிஜிட்டல் பயிற்சி

150 மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகையுடன் டிஜிட்டல் பயிற்சி வழங்கப்படும். 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் 16,250 பேருக்கு இலவச டேப்லெட்டுகள் வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கான மாத உதவித்தொகை திட்டம் அனைத்து தகுதியான குடும்ப தலைவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ரூ.3 ஆயிரம்

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பெட்டகம் வழங்கப்படும். ஏழை பெண்களின் திருமண நிதியுதவி 35 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாகவும், ஆதரவற்ற பெண்கள், விதவைகளின் மகள்களுக்கான உதவி ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.