சித்தூர்,
ஜனநாயக கடமையை ஆற்ற பணம் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வாக்குக்காக கொடுக்கப்பட்ட பணத்தை வாக்குப்பெட்டியிலேயே திருப்பி போட்டு வாக்காளர் ஒருவர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் அருகே உள்ள முரம் கிராமத்தில் சமீபத்தில் மண்டல மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலின் போது, வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் தரப்பில் பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பலமநேர் அரசு கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது வாக்குப்பெட்டியை திறந்து அதிகாரிகள் வாக்குச்சீட்டுகளை பிரித்து கொண்டிருந்தனர். அதில் ஒரு வாக்குப்பெட்டிக்குள் வாக்குச்சீட்டுடன், புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் இரண்டும், அதனுடன் ஒரு துண்டுச் சீட்டும் கிடப்பதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
அந்தத் துண்டு சீட்டை எடுத்து அதிகாரிகள் படித்து பார்த்தபோது, அதில் எழுதப்பட்டிருந்த வாசகம் அனைவரையும் நெகிழ வைத்தது. அதில், "ஐயா... நீங்கள் ஓட்டுக்காக கொடுத்த 1,000 ரூபாய் பணத்தை நீங்களே திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள். பணம் வாங்கிக் கொண்டு நான் வாக்களிக்க விரும்பவில்லை. நன்றி" என்று அந்த வாக்காளர் உருக்கமாக எழுதியிருந்தார்.
வாக்குக்காக வழங்கப்பட்ட பணத்தை துச்சமாக மதித்து, தனது சுயமரியாதையை நிலைநாட்டிய அந்த வாக்காளரின் செயலுக்கு சித்தூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சுமித் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணத்தை நிராகரித்து வாக்களித்த அந்த வாக்காளரின் செயல் ஜனநாயகத்துக்கு மிகுந்த உத்வேகம் அளிக்கிறது. தேர்தல் நேர்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்று புகழாரம் சூட்டியுள்ளார். தேர்தலில் பணம், மதுபானம் மூலம் வாக்காளர்களை கவர முயற்சிக்கும் சூழ லில், இந்த வாக்காளரின் நேர்மையான முடிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.