டெல்லி,
டெல்லியில் தவறுதலாக பை மாறி, அதிலிருந்த ரூ.55 லட்சம் தங்க நகைகள் மற்றும் ரூ.9,000 ரொக்கப் பணமும் மாயமாகியன. இதையடுத்து டெல்லி போலீசார் 6 நாட்களுக்குப் பிறகு நகையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
டெல்லியில் உள்ள காஷ்மீரி கேட் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து நிலையத்தில் கடந்த 12-ம் தேதி அன்றுபயணி ஒருவர் தனது உடைமைகளை எக்ஸ்-ரே இயந்திரத்தில் சோதனைக்காக வைத்தார். அப்போது, அதே இடத்தில் இருந்த மற்றொரு பயணியின் கருப்பு நிறப் பையும், இவரது பையும் ஒரே மாதிரியாக இருந்ததால் தவறுதலாக பைகள் மாறின. சோதனை முடிந்ததும், அந்த மற்றொரு பயணி ரூ.55 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.9,000 ரொக்கம் இருந்த பையைத் தன்னுடையது என நினைத்து எடுத்துச் சென்றுவிட்டார்.
தனது நகைப் பை மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர் அன்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி அன்று காஷ்மீரி கேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இது திருட்டு வழக்காக கருதப்பட்ட நிலையில், பேருந்து நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இது திட்டமிட்ட திருட்டு அல்ல என்பதும், தற்செயலாக நடந்த பை மாற்றம் என்பதும் உறுதியானது.
தொழில்நுட்பத் தடயங்கள் மற்றும் பயண விவரங்களைக் கொண்டு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தவறுதலாக பையை எடுத்த நபர் உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, டெல்லியில் இருந்து சுமார் 2,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெங்களூருவில் அந்த நபரை போலீசார் தொடர்பு கொண்டனர்.
ஊருக்குச் சென்ற பிறகே பை மாறியதை உணர்ந்த அந்த நபர், டெல்லி காவல்துறையைத் தொடர்பு கொள்ள முயன்றும் இணைப்பு கிடைக்காததால், நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருந்ததாகத் தெரிவித்தார். போலீசார் அவரைத் தொடர்பு கொண்டவுடன், எந்த தயக்கமுமின்றி நகைப் பையை ஒப்படைத்தார். 6 நாட்கள் தீவிர முயற்சிக்குப் பிறகு, கடந்த 18-ம் தேதி அன்று ரூ.55 லட்சம் மதிப்புள்ள முழு நகைகளும் எந்த சேதமுமின்றி மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.