image courtesy : PTI 
தேசிய செய்திகள்

ரூ.68 ஆயிரத்து 483 கோடி சுங்க கட்டணம் வசூல்: எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?

கடந்த 2025-26-ம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட கட்டண விவரங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம், சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகிறது. சுங்கச்சவடிகளில் பயணிக்கும் வாகனங்களின் வகைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதாவது, காருக்கு ஒரு கட்டணமும், லாரி, பஸ் போன்ற வாகனங்களுக்கு ஒரு கட்டணமும் என வாகனங்களின் தன்மைக்கேற்ப கட்டணங்கள் வசூல் செய்யபடுகின்றன. பாஸ்டேக் அறிமுகமானதால், வாகனங்கள் நீண்ட் நேரம் காத்திருக்காமல் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுங்கச்சாவடிகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வசூலாகிறது. இதன் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த 2025-26-ம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட கட்டண விவரங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் ரூ.68 ஆயிரத்து 483 கோடி அளவுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் ரூ.8 ஆயிரத்து 862 கோடியே 12 லட்சம் வசூலாகியுள்ளது. தமிழ் நாட்டை பொறுத்தவரையில் ரூ.4 ஆயிரத்து 708 கோடியே 19 லட்சம் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.