புதுடெல்லி,
பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர லஞ்சம் வாங்கியதாக கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்தபடி, மோசடி வேலைகளை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. பிரதமர் அலுவலக உயர் அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி. மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி என்று சொல்லிக்கொண்டு, பிரபல தொழில் அதிபர்களின் குடும்பத்தினரை செல்போனில் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். அதிதி சிங் என்பவர் அவர் மீது புகார் அளித்தார். சுகேஷ் இதுபோல் ரூ.200 கோடி வரை பறித்துள்ளதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து, சுகேஷ் சந்திரசேகரை கடந்த 2021-ம் ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது.
மோசடி பணம் சொத்துகளாகவும், சொகுசு வாகனங்களாகவும், விலைஉயர்ந்த பரிசுப் பொருட்களாகவும் மாற்றப்பட்டன. பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும், சுகேஷிடம் இருந்து விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பிங்கி இரானி என்பவர் மூலம் பெற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஜாக்குலின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்களும், டிஜிட்டல் ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டன.
குற்றச்சாட்டு பதிய உத்தரவு:
இந்த நிலையில் இந்த வழக்கு, டெல்லியில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி பிரசாந்த் சர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், அவருடைய மனைவி லீனா மரியாபால், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிங்கி இரானி உள்பட 17 பேர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். முதல் நோக்கிலேயே அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும், அவற்றின் அடிப்படையில் அவர்கள் மீது கடுமையான சந்தேகம் எழுவதாகவும் நீதிபதி கூறினார்.