கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

விபத்தில் இறந்த பிச்சைக்காரர் பையில் இருந்த ரூ.4.5 லட்சம்.. போலீசார் எடுத்த முடிவு..?

அந்த பிச்சைக்காரர் வைத்திருந்த பைகளில் மொத்தம் ரூ.4,52,207 இருந்தது என்றும், 12 சவுதி நாட்டு ரியால் பண நோட்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஆலப்புழை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் அனில்கிஷோர் என்பவர் பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுத்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரம் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலப்புழை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்தில் அனில் கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தநிலையில், சிகிச்சையில் இருந்த அவர் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறி தான் வழக்கமாக தங்கக்கூடிய இடத்துக்கு சென்று படுத்துக்கொண்டார். ஏற்கனவே விபத்தில் சிக்கிய நிலையில் சரியான சிகிச்சை பெறாததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அனில் கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அவர் தங்கி இருந்து இடத்தில் இருந்த அவரது உடமைகளை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பைகளில் மொத்தம் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 207 இருந்தது. மேலும் 12 சவுதி நாட்டு ரியால் பண நோட்டுகள், பழைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இதையடுத்து அனில் கிஷோர் மருத்துவமனையில் அனுமதித்த போது கொடுக்கப்பட்ட முகவரியின் அடிப்படையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை போலீசார் தேடினர். ஆனால், யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவருடைய பைகளில் இருந்த பணத்தை கோர்ட்டில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.