புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், டெல்லியின் மிக முக்கிய சொகுசு குடியிருப்பு பகுதியான கிரேட்டர் கைலாஷில், வெள்ளம் சூழ்ந்த சாலையில் நபர் ஒருவர் ரப்பர் மிதவையில் படுத்துக்கொண்டு ஜாலியாக சவாரி செய்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ஸ்ரீ கண்டேல்வால் என்ற பயனர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், முழங்கால் அளவு தேங்கியுள்ள வெள்ள நீரில், நபர் ஒருவர் கையில் துடுப்புடன் சொகுசாக மிதவையில் படுத்துக்கிடக்கிறார். அவரது நண்பர்கள் தண்ணீரில் நடந்தபடி அந்த மிதவையை தள்ளி செல்கின்றனர்.
கோடிக்கணக்கில் சொத்து மதிப்புள்ள இந்த சொகுசு பகுதியில், இவ்வளவு வரி கட்டியும் வடிகால் வசதி இல்லாததை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "டெல்லி சாலைகள் இலவச வாட்டர் பார்க்காக மாறிவிட்டன", "டெல்லி இனி இந்தியாவின் வெனிஸ் நகரம்" என பலரும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த படகு சவாரி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.