தேசிய செய்திகள்

‘விதிகள் குடிமக்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும், அவமானப்படுத்தக் கூடாது’ - நிர்மலா சீதாராமனுக்கு நவீன் பட்நாயக் கடிதம்

வங்கி அதிகாரிகள் நடைமுறைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு மக்களை கைவிடுவதாக நவீன் பட்நாயக் குற்றம்சாட்டியுள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் கியோன்ஜர் பகுதியில் உள்ள வங்கியில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த கக்ரா முண்டா என்ற பெண் கணக்கு வைத்திருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் கக்ரா முண்டா உயிரிழந்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.19,400 பணத்தை எடுப்பதற்காக, அவரது சகோதரர் ஜீத்து முண்டா, வங்கிக்கு சென்றுள்ளார்.

அப்போது வங்கி அதிகாரிகள் ஜீத்து முண்டாவிடம், பணம் எடுக்க வேண்டும் என்றால் கணக்கு வைத்திருப்பவர் நேரில் வர வேண்டும், அல்லது அவர் இறந்துவிட்டார் என்றால், அவரது இறப்பு சான்றிதழ் வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் சட்ட நடைமுறைகளை புரிந்து கொள்ள முடியாத ஜீத்து முண்டா, கடந்த திங்கள்கிழமை மயானத்திற்​குச் சென்று தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்​து, எலும்​புக்​கூடை துணியால் சுற்றி தோளில் சுமந்​த​படி 3 கிலோ மீட்​டர் தூரம் நடந்து வங்​கிக்கு வந்தார்.

இந்​த காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி நாடு முழுவதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தின. இது வங்கி​யின் மனிதாபி​மானமற்ற செயல் எனப் பலரும் கண்​டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஒடிசா முதல்​-மந்திரி மோகன் சரண் மாஜி விசா​ரணைக்கு உத்​தர​விட்​டார்.

இந்த நிலையில், விதிகள் என்பது குடிமக்களுக்கு அதிகாரமளிக்க வேண்டுமே தவிர, அவர்களை அவமானப்படுத்தக் கூடாது என ஒடிசா மாநில முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-

“ஜீத்து முண்டா என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர், தனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக தனது சகோதரியின் மரணத்திற்கு ஆதாரமாக அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்கு எடுத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். வங்கிக்கு அவர் பலமுறை சென்றும், அதிகாரிகளிடம் இருந்து எந்த உதவியோ அல்லது தெளிவோ கிடைக்காத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதைவிட அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகக் கூறி இந்த மனிதாபிமானமற்ற நடத்தையை வங்கி நியாயப்படுத்த முயன்றதுதான். வங்கி அதிகாரிகள் நடைமுறைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, தாங்கள் சேவை செய்ய வேண்டிய மக்களையே கைவிடும் போக்கையே இது காட்டுகிறது.

ஜனநாயகத்தில் விதிகள் என்பது குடிமக்களுக்கு அதிகாரமளிக்க வேண்டுமே தவிர, அவர்களை அவமானப்படுத்தக் கூடாது. இந்த கொடுமையான சம்பவம் ஒடிசா முழுவதும் மக்களின் உணர்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது. அதோடு, இந்த சம்பவம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தச் சம்பவம் தனிப்பட்டதாக இருந்தாலும், வங்கி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு புரிதலை இது நமக்கு வழங்குகிறது. மத்திய நிதி மந்திரி இந்த விவகாரத்தில் தலையிட்டு, குடிமக்களிடம் இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடத்தை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.