எம்.எல்.ஏ. வையாபுரி 
தேசிய செய்திகள்

ஹெல்மெட் மற்றும் நம்பர் பிளேட் இன்றி பைக்கில் வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ; அபராதம் விதித்த காவல்துறை

எம்.எல்.ஏ. வையாபுரி இன்று தனது இருசக்கர வாகனத்தில் சட்டமன்றத்திற்கு புறப்பட்டு வந்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நம்பர் பிளேட் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.-வுக்கு போலீஸார் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ.

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் வையாபுரி மணிகண்டன். இவருக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தும், ஓட்டுநர் நியமிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு புறப்பட்டு வந்தார்.

போலீஸார் அபராதம்

தலைக்கவசம் அணியாமலும், நம்பர் பிளேட் இல்லாமலும் இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவை வளாகம் வந்த எம்.எல்.ஏ.-விடம், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பரபரப்பு

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் ஓட்டுநர்கள் வழங்கப்படாததை கண்டித்து அவர் இவ்வாறு வந்ததாக கூறப்படும் நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.-வுக்கு போலீஸார் அபராதம் விதித்த சம்பவம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விதிகளுக்கு முன்பாக அனைவரும் சமம் என செயல்பட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.