தேசிய செய்திகள்

எரிபொருள் குறித்து பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யாக்கப்பட்டன - பிரதமர் மோடி

இந்தியா தோல்வியடையும் என எதிர்பார்த்தவர்கள் இன்று ஏமாற்றத்தில் உள்ளனர் என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை சாடினார்.

ஜெய்ப்பூர்:

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை இந்தியா திறம்பட சமாளித்ததுடன், அதன் சுமையை பொதுமக்கள் மீது பெருமளவில் விழாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் பாலோத்ரா மாவட்டம் பச்பத்ராவில் நாட்டின் முதல் கிரீன்ஃபீல்ட் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மேற்காசியாவில் ஏற்பட்ட நெருக்கடியின் போது இந்தியா தனது எரிசக்தி இறக்குமதி ஆதாரங்களை விரிவுபடுத்தியது. நெருக்கடிக்கு முன்பு சுமார் 25 முதல் 26 நாடுகளில் இருந்து எரிசக்தி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 40-க்கும் மேற்பட்ட நாடுகளாக உயர்த்தப்பட்டது.

இது இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளால் சாத்தியமானது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது. இருப்பினும், அந்தச் சுமையை அரசு ஏற்றுக்கொண்டது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்து, பொதுமக்கள் மீது கூடுதல் சுமை ஏற்படாமல் பாதுகாத்தோம்.

இந்தியாவுக்கு எதிராக வதந்திகள் பரப்பப்பட்டது. மக்களைத் தூண்டிவிட முயற்சிகள் நடைபெற்றது. இந்தியா தோல்வியடையும் என எதிர்பார்த்தவர்கள் இன்று ஏமாற்றத்தில் உள்ளனர். இந்தியா தற்போது உலகின் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளதாகவும், ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கு இடையிலான போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் மற்றும் உர விநியோக பாதிப்புகளையும் மத்திய அரசின் நீண்டகால திட்டங்கள் மூலம் சமாளிக்க முடிந்தது” என்றார்.