தேசிய செய்திகள்

ரஷியாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் 7 கச்சா எண்ணெய் கப்பல்கள்; சீனாவுக்கு செல்லவிருந்த நிலையில் பயணத்தில் திடீர் மாற்றம்

கச்சா எண்ணெய் கப்பல்கள் சனிக்கிழமை இந்தியா வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி,

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது. அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அவ்வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே, உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியுடன் மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதையடுத்து, வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டுமென அமெரிக்கா கூறியது. மேலும், இந்தியா மீது விதித்த 50 சதவீத வரியை 20 சதவீதமாக குறைத்தது. ஆனால், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்தது. ஆனால், கொள்முதலை முழுமையாக நிறுத்தவில்லை.

அதேவேளை, தற்போது மத்திய கிழக்கில் போர் நடைபெற்று வருவதால் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க 30 நாட்கள் அனுமதிப்பதாக அமெரிக்கா கூறியது. இதையடுத்து, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவை அதிகரித்தன.

இந்நிலையில், ரஷியாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட 7 கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

ரஷியாவின் பால்டிக் கடல் துறைமுகத்தில் இருந்து சீனாவுக்கு கடந்த ஜனவரி மாதம் புறப்பட்ட இந்த 7 கச்சா எண்ணெய் கப்பல்களும் தென்சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தன. சீனாவுக்கு கப்பல்கள் செல்லவிருந்த நிலையில் அவை இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த 7 கச்சா எண்ணெய் கப்பல்களும் வரும் சனிக்கிழமை கர்நாடகாவின் மங்களூரு துறைமுகத்திற்கு வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.