திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், அரவணைப் பாயாசம், அப்பம் உள்ளிட்ட பிரசாதங்களை விரைவு தபால் மூலம் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கும் சிறப்புத் திட்டத்தை இந்திய தபால் துறையும், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் இணைந்து செயல்படுத்த உள்ளன.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 41 நாட்களுக்கான மண்டல பூஜை காலம் தொடங்குகிறது.
இதையொட்டி கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், அங்கு வழங்கப்படும் பிரசாதங்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பக்தர்களின் இந்த சுமையை குறைக்கும் நோக்கில், இந்திய தபால் துறையின் விரைவு தபால் (Speed Post) சேவை மூலம் பிரசாதங்களை அவரவர் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தபால் துறையும், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் இணைந்து வெளியிட்டுள்ளன.
இதன்படி, சபரிமலை கோவில் வளாகத்தில் அரவணை பாயாசம் மற்றும் அப்பம் விற்பனை கவுன்டர்களுக்கு அருகிலேயே, 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேக தபால் முன்பதிவு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தின் மூலம் பக்தர்கள் தாங்கள் வாங்கும் பிரசாதங்களை, இந்திய தபால் துறையின் விரைவு தபால் சேவை மூலமாக நாட்டின் எந்த பகுதியில் உள்ள தங்களின் வீடுகளுக்கும் மிக விரைவாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைக்க முடியும். இந்த புதிய சேவை பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.