தேசிய செய்திகள்

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறது: கேரள ஐகோர்ட்டு

சபரிமலை விவகாரம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை, கதவு நிலைகளில் தங்க கவசம் பொருத்தப்பட்டு இருந்தது. இவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னைக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு வரப்பட்டபோது, அதில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து, சிறப்பு விசாரணை குழு விசாரிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து உன்னிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாக முன்னாள் அதிகாரி முராரி பாபு, முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமார், முன்னாள் தலைவர் வாசு, முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமார், சபரிமலை அய்யப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரு உள்பட 12 பேரை அடுத்தடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர். சமீபத்தில் சபரிமலை விவகாரம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் விசாரணையில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி கேரள பா.ஜனதா தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்பட 4 பேர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ராஜா விஜயராகவன் தலைமையிலான அமர்வு பரிசீலித்தது.

அப்போது சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இது மிக நுட்பமான ஒரு வழக்கு என்பதால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. அதுகுறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. அதற்கான தீவிர கண்காணிப்பு ஐகோர்ட்டு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஐகோர்ட்டு அமர்வு தெரிவித்தது.