தேசிய செய்திகள்

சபரிமலையில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர் விவகாரம்.. விசாரணையில் திடீர் திருப்பம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவில் பகுதியில் ஹெலிகாப்டர்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தி மதியம் 1.30 மணிக்கு கொச்சி கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சபரிமலை கோவிலுக்கு மேல் பகுதியில் கொடி மரம் அருகே மிகவும் தாழ் வாக பறந்து சென்றது. இந்த சம்பவம் சபரிமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கடலோர காவல் படை கொச்சி தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமாக கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் பயிற்சி நிமித்தமாக, அவ்வப்போது 60 முதல் 80 கி.மீட்டர் தூரத்திற்கு பறப்பது வழக்கம். ஆனால் மோசமான காலநிலையால், திசை மாறிய ஹெலிகாப்டர் சபரிமலை அருகே மிக தாழ்வாக பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக விளக்கம் அளித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயகுமார் கூறியதாவது:-சபரிமலையில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்த சம்பவம் தொடர்பாக ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், மோசமான வானிலை காரணமாகவே ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது என கடலோர காவல்படை அளித்துள்ள விளக்கம் திருப்திகரமாக இல்லை. சபரிமலை கோவிலும் அதன் வளாகமும் மாநில அரசால் சிறப்புப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தாழ்வான உயரத்தில் பறக்க நிர்பந்திக்கப்பட்டது குறித்து காவல்துறைக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கேரள ஏடிஜிபி விசாரணை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது பொதுப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் செயலைத் தெரிந்தே செய்ததற்காக, கேரள காவல்துறைச் சட்டத்தின் பிரிவு 118(e)-ன் கீழ் பம்பா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், முதல் தகவல் அறிக்கையில் இதுவரை யாரும் குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை.