புதுடெல்லி,
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக நுழைந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவன் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர். அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜமாத்-உத்-தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறான். இவ்வியக்கமும் தடைவிதிக்கப்பட்ட இயக்கமாக ஐ.நா., அமெரிக்கா அறிவித்து உள்ளது. ஹபீஸ்சயீத்தின் தலைக்கு அமெரிக்கா ரூ.64 கோடி பரிசு அறிவித்து இருந்தது.
ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. ஆனால் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரிந்தான்.
இந்திய தரப்பில் பல்வேறு முறை வலியுறுத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான், அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த டொனால்டு டிரம்ப்பின் நடவடிக்கையினால் ஆட்டம் கண்டது. இந்தியாவில் இருந்து மேலும் நெருக்கடி எழும், அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாக வேண்டும் என்றநிலையில் ஹபீஸ் சயீத்தும், அவனது கூட்டாளிகளும் பாகிஸ்தான் அரசால் ஜனவரி மாதம் வீட்டுக்காவலில் வைத்தது.
ஹபீஸ் சயீத் வீட்டுக்காவல் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அரசு பஞ்சாப் மாகாண கோர்ட்டில் மேலும் 3 மாதங்கள் வீட்டுக்காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், எந்த வழக்குகளிலும் ஹபீஸ்சயீத்துக்கு தொடர்பு இல்லாத நிலையில் அவரை ஏன்? வீட்டுக்காவலில் வைக்க வேண்டும். உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அவன் வீட்டுக்காவலில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுவார் என்று தெரிகிறது.
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றும் வேலை என மத்திய அரசு கூறிஉள்ளது என தகவல்கள் தெரிவித்து உள்ளது.
பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை உத்தரவு பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு சுதந்திரமான இடம் கொடுக்கிறது, பிறநாட்டிற்கு எதிராக தாக்குதல் நடத்த தூண்டுகிறது என்பதையே காட்டுகிறது. ஹபீஸ் சயீத் விவகாரத்தில், பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச சமுதாயத்தை ஏமாற்றுகிறது என்பதை இது காட்டுகிறது, என அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளது.