புதுடெல்லி,
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் எந்தவித வன்முறையும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை தோராயமாக 84.98 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 73.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.92 சதவீதம், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 8 மணி நிலவரப்படி சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் அதிகபட்சமாக 93.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழகத்தை தொடர்ந்து 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 21-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
152 தொகுதிகளிலும் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 152 தொகுதிகளில் நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேற்கு வங்க மாநில முதல்கட்ட தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 92.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து மேற்குவங்காளம் இரவு 9 மணி நிலவரப்படி - 92.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்கு வங்காளத்தில் 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தக்ஷின் தினஜ்பூரில் 94.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்தநிலையில், தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆணையத்தின் சல்யூட் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சுதந்திரத்துக்கு முன் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம், மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆணையத்தின் சல்யூட் என அதில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4 திங்களன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.