தேசிய செய்திகள்

பீகார் முதல் மந்திரியாக சாம்ராட் சவுத்ரி இன்று பதவியேற்பு

பீகாரில் 21 ஆண்டு காலமாக முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்

21 ஆண்டுகளாக பீகார் முதல்-மந்திரியாக இருந்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக பணியாற்ற வேண்டும் என்ற தனது நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மார்ச் 30-ந் தேதியன்று பீகார் சட்ட மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் விலகினார். முன்னதாக, அவர் மார்ச் 17-ந் தேதியன்று நடைபெற்ற தேர்தலில், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார். சமீபத்தில் அவர் மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது முதல்-மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பீகார் மாநில கவர்னர் சையத் அட்டா ஹஸ்னைனை நேரில் சந்தித்த நிதிஷ் குமார் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பீகாரின் புதிய முதல்-மந்திரியாக சாம்ராட் சவுத்ரியை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து, சாம்ராட் சவுத்ரி இன்று (புதன்கிழமை) முதல்-மந்திரியாக பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பீகாரில் பா.ஜனதா முதன்முறையாக முதல்-மந்திரி பொறுப்பை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. பீகாரில் பா.ஜனதா சட்டமன்ற கட்சித் தலைவர் பொறுப்பை ஒப்படைத்ததற்காக பா.ஜனதா தலைமைக்கு சவுத்ரி நன்றி தெரிவித்துள்ளார்.