தேசிய செய்திகள்

வடமாநிலங்களில் கொளுத்தும் வெயில் - பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்

டெல்லியில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் கொளுத்தி எடுக்கும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், பல்வேறு வடமாநிலங்களில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சில மாநிலங்களில் கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் காலை 7.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 7 மணி முதல் 11.30 மணி வரை, மத்திய பிரதேசத்தில் 7.30 மணி முதல் 12.30 மணி வரை, ஒடிசாவில் 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மராட்டிய மாநிலத்தில் 7 மணி முதல் 11.15 மணி வரை, ராஜஸ்தானில் 7.30 மணி முதல் 12 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு, மாணவர்கள் தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்களுக்கு பள்ளி நேரம் குறைக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர்கள் மதியம் 1.30 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.