புதுடெல்லி,
நாடு முழுவதும் கோடை வெயில் தீவிரமாக இருந்து வரும் நிலையில், வட மாநிலங்களில் அனல்காற்றுடன் கடும் வெப்பம் மக்களை வாட்டி வருகிறது.தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் பண்டா நகரில் நேற்று 118.76 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று அங்கு 118.4 டிகிரி வெயில் கொளுத்தியது. இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 27-ந்தேதி அங்கு 117.68 டிகிரி வெப்பநிலை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.பொதுவாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மர், சுரு போன்ற பகுதிகளில் மட்டுமே இத்தகைய கடும் வெப்பம் காணப்படும். ஆனால் தற்போது அதேபோன்ற வெப்பம் உத்தரபிரதேசத்தின் பண்டா நகரிலும் நிலவி வருகிறது.
மேலும், கடுமையான அனல்காற்று வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். காலை 10 மணிக்கே சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
வெயிலின் தாக்கம் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வெளிப்புற தொழிலாளர்கள் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மருத்துவர்களும் தேவையற்ற வெளிச்செலவை தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும் அறிவுறுத்தியுள்ளனர்.