தேசிய செய்திகள்

மீனவர்கள் வலையில் சிக்கிய கடற்குதிரைகள்: பத்திரமாக கடலில் விடப்பட்டன

மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக வீசிய வலையில் 3 கடற்குதிரைகள் சிக்கின.

மும்பை,

கடற்குதிரை என்பது கடலில் வாழும் ஒரு வகை மீன் இனமாகும். பிற மீன்களை போன்று செவுள்கள், துடுப்புகள் கடற்குதிரைகளுக்கும் இருக்கின்றன. இருப்பினும், தலைப்பகுதி குதிரையைப்போல் இருப்பதுடன், சில நேரங்களில் குதித்து, குதித்து குதிரைபோல் செல்வதால், இவை கடற்குதிரை என்று அழைக்கப்படுகின்றன.

17 செ.மீ. நீளமும், 15 கிராம் எடையும் கொண்ட சிறிய உயிரினமான கடற்குதிரைகளின் இனப்பெருக்கம் வித்தியாசமானது. பெண் கடற்குதிரைகள் தங்களுடைய முட்டைகளை (சுமார் 200) ஆண் கடற்குதிரைகளின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்க பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல பேணிக்காத்து, 6 வாரங்களுக்கு பிறகு குஞ்சுகளை பொறிக்கச் செய்கின்றன.

இந்த நிலையில் வித்தியாசமான வாழ்க்கை முறையை கொண்ட கடற்குதிரைகள் சில மீனவர்கள் வலையில் சிக்கி மீண்டிருக்கின்றன. மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, மீன்பிடிப்பதற்காக அவர்கள் வீசிய வலையில் மீன்களுடன் 3 கடற்குதிரைகளும் சிக்கின. இதுகுறித்து, மீனவர்கள் மாநில மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியை சேர்ந்த நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 கடற்குதிரைகளையும் மீட்டனர். தொடர் கண்காணிப்புக்கு பிறகு 3 கடற்குதிரைகளையும் நேற்று பத்திரமாக கடலில் விட்டனர்.