தேசிய செய்திகள்

காதலனுடன் செல்ல முயன்ற பெண் ஆணவக்கொலை.. செல்பி வீடியோவால் சிக்கிய குடும்பத்தினர்..!

காதலனை திருமணம் செய்ய விரும்புவதாகவும் தனக்கு கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி தரவேண்டும் என்று இளம்பெண் புகார் செய்தார்.

நகரி,

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் சொர்லிகாம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (வயது 24), பட்டதாரி. இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு வெங்கடேஸ்வர்ராவுடன் திருமணம் ஆகி, 4 வயதில் ஒரு மகன் உள்ளான். குரூப்-2 தேர்வுக்காக ஹரிணி, ஐதராபாத்தில் தங்கிப் படித்து வந்தார். அப்போது அங்கு பயிற்சி மையத்திற்கு வந்த நாகேந்திரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மலர்ந்தது.

இந்நிலையில் பாலாநகர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஹரிணி தான் நாகேந்திராவை திருமணம் செய்ய விரும்புவதாகவும் தனக்கு கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி தரவேண்டும் என்று புகார் செய்தார்.

அடித்துக்கொலை

இதையடுத்து குடும்பக் கவுரவம் பாதிக்கப்படும் என அஞ்சிய அவரது தாய் விஜயகுமாரி மற்றும் தாத்தா பாலு ஆகியோர் ஹரிணியை தீர்த்துக் கட்ட திட்டம் திட்டினர். இந்த நிலையில் விவாகரத்து வாங்கித் தருவதாகக் கூறி ஹரிணியை ஊருக்கு வரவழைத்தனர்.

கடந்த மே 31-ந் தேதி நள்ளிரவு. தூங்கிக் கொண்டிருந்த ஹரிணியின் கால்களைத் தாய் பிடித்துக் கொள்ள, தாத்தா இரும்பு கம்பியால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். இந்த விஷயத்தை அவரது கணவருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினார். பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடி, அவசர அவசரமாக உடலைத் தகனம் செய்தனர்.

'செல்பி' வீடியோ

முன்னதாக, ஹரிணி ஐதராபாத்தில் இருந்து ஆந்திராவுக்கு வரும் பொழுதே குடும்பத்தினர் மீது சந்தேகம் இருப்பதாக காதலன் நாகேந்திராவிடம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், "நான் ஒரு வாரத்தில் வராவிட்டால் போலீசில் புகார் செய்ய வேண்டும்" என காதலன் நாகேந்திராவுக்கு ஒரு 'செல்பி' வீடியோ அனுப்பியிருந்தார்.

அதன்படி அவர் வராததால் காதலன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து ஹரிணியின் தாய், தாத்தா, அவரது கணவர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.