கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் 
தேசிய செய்திகள்

கர்நாடக முதல்-மந்திரி சாமி தரிசனம் செய்தபோது பக்தர்கள் காலணி வீசியதால் பரபரப்பு

ஹாசனம்பா கோவிலில், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி முதல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அங்கிருந்த எல்.இ.டி. திரை மீது காலணிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்கள்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஹாசனம்பா கோவிலில், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி முதல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி விடுமுறை நாளான நேற்று, லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காகக் கோயிலில் குவிந்தனர்.

முதல்-மந்திரி சாமி தரிசனம்

இந்நிலையில், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் தனது மனைவியுடன் ஹாசனம்பா கோவிலுக்கு வருகை தந்தார். அவரது வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக பொது தரிசன வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எல்.இ.டி. திரை

இதனால், பல மணி நேரமாக காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் கடும் ஆத்திரமடைந்தனர். அப்போது, கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரையில், டி.கே. சிவகுமார் கருவறைக்குள் அமர்ந்து தரிசனம் செய்யும் காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

காலணிகள்

இதை கண்டு ஆத்திரமடைந்த பக்தர்கள் சிலர், தங்களது காலணிகளை கழற்றி, டி.கே. சிவகுமாரின் காட்சிகள் ஒளிபரப்பான எல்.இ.டி. திரை மீது சரமாரியாக வீசினர். இந்த சம்பவத்தால் கோயில் வளாகத்தில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

SCROLL FOR NEXT