புதுடெல்லி,
அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அக்னிவீரர்களின் சேவைக் காலத்தை மத்திய அரசு மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்துள்ளது. இதன்மூலம், அவர்களின் பணிக்காலம் தற்போதுள்ள 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது என முப்படைகளின் தலைமைத் தளபதி (சி.டி.எஸ்.) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி அறிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்த முதல் பேட்ஜ் அக்னிவீரர்களின் சேவைக்காலம் வரும் டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், பயிற்சி பெற்ற வீரர்களை ராணுவ பணிகளில் தக்கவைக்கும் வகையில், அக்னிவீரர்களின் சேவைக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி அக்னிவீரர்களின் சேவைக் காலத்தை மத்திய அரசு மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து, அவர்களின் பணிக்காலத்தை 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பேசிய சி.டி.எஸ். ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி, 2022 ஜூன் 14-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபத் திட்டத்தில், தொடர்ச்சியான செயல்திறன் மதிப்பீடு மற்றும் காலமுறை ஆய்வுகளுக்கான வழிமுறைகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தார். இதன்படி முதல் பேட்ஜ் அக்னிவீரர்களின் 4 ஆண்டு சேவைக்காலம் முடிவுக்கு வரும் சூழலில், அவர்களின் செயல்திறன் குறித்த பகுப்பாய்வு முடிவுகள் நல்ல நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நீட்டிக்கப்பட்ட இரண்டு ஆண்டு காலத்தை நிறைவுசெய்த பிறகு, தொடர்ந்து பணியாற்ற விரும்பும் அக்னிவீர்கள், புறநிலைத் தேர்வு அளவுகோல்களின் அடிப்படையில் ஆயுதப் படைகளில் சேர்வதற்குப் பரிசீலிக்கப்படுவார்கள் என்று சி.டி.எஸ். ஜெனரல் என்.எஸ்.ராஜா தெரிவித்துள்ளார்.