டெல்லி,
ஆம் ஆத்மி கட்சி கட்சியின் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சி செய்து வருகிறது. அதேவேளை, டெல்லியில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 10 எம்.பி.க்கள் இருந்தனர். மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத்தலைவராக ராகவ் சந்தா எம்.பி. செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, ராகவ் சந்தா கடந்த சில மாதங்களாக பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். இதையடுத்து, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்து ராகவ் சந்தா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு பஞ்சாப்பை சேர்ந்த ஆம் ஆத்மி எம்.பி. அசோக் மிட்டல் நியமிக்கப்பட்டார். அதேவேளை, ஊழல் எதிர்ப்பை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி தற்போது ஊழல் மற்றும் தனிப்பட்ட நபர்களின் நலனுக்காக செயல்பட்டு வருவதாக ராகவ் சந்தா குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அதன்படி, ராகவ் சந்தா, அசோக் மிட்டல், சந்தீப் பதக், ராஜேந்தர் குப்தா, விக்ரம் ஷானே, ஹர்பஜன் சிங், ஸ்வாதி மலிவால் ஆகியோர் ஆம் ஆத்மியில் இருந்து விலகியுள்ளனர். ஆம் ஆத்மியில் இருந்து விலகிய 7 எம்.பி.க்களில் ராகவ் சந்தா, அசோக் மிட்டல், சந்தீப் பதக் ஆகிய 3 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். எஞ்சிய 4 ஆம் ஆத்மி எம்.பி.க்களும் இன்றே பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.