புதுடெல்லி,
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய பாஜக அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில், சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்டது.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை 2023 டிசம்பரில் உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஜம்மு-காஷ்மீருக்கு முடிந்தவரை விரைவில் மாநில அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, 2024-ல் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அபார வெற்றி பெற்றது. அவரது மகன் உமர் அப்துல்லா முதல்-மந்திரி பதவியேற்றார். அவரும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“சட்டப்பிரிவு 370 மற்றும் 35(A) ஆகியவை ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் அமைதி, முன்னேற்றம் மற்றும் சம வாய்ப்புகளுக்கான ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது.
டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை நாம் கொண்டாடும் வேளையில், இந்தியாவின் ஒற்றுமைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நாம் போற்றுகிறோம். அவரது அந்த தொலைநோக்குப் பார்வை 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நனவானது.
ஒரே நோக்கத்துடனும் உறுதியான மனவுறுதியுடனும், வளமான ஜம்மு-காஷ்மீர், செழிப்பான லடாக் மற்றும் 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) ஆகியவற்றை உருவாக்குவதில் நமது நாடு தொடர்ந்து உறுதியுடன் உள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.