திருவனந்தபுரம்.
திருவனந்தபுரத்தில் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளை பலாத்காரம் செய்த வழக்கில் கிரிக்கெட் பயிற்சியாளருக்கு மேலும் 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவனந்தபுரம் போக்சோ விரைவு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்தவர் மனு (வயது40). இவர் கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்தார். இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு இளம்வீராங்கனை பயிற்சி பெற்று வந்தார். அப்போது மனு அந்த வீராங்கனையை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து அந்த வீராங்கனை பயிற்சிக்கு வருவதை நிறுத்தி விட்டார். இதுபோல் மனு வேறு பல வீராங்கனைகளையும் மிரட்டில் பலத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்வீராங்கனை போலீசில் புகார் கொடுத்தார். அவரை தொடர்ந்து மனுவால் பாதிக்கப்பட்ட மற்ற வீராங்கனைகளும் புகார் அளித்தனர்.
அதன்படி திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனுவை கைது செய்தனர். அவர் மீது 6 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் திருவனந்தபுரம் போக்சோ விரைவு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் வழக்கில் மனுவுக்கு கடந்த மாதம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து 2-வது பலாத்கார வழக்கில் கடந்த 25-ந் தேதி பயிற்சியாளர் மனுவுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.66 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அஞ்சு மீரா பிர்லா தீர்ப்பளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது மொத்தம் 6 வழக்குகள் உள்ள நிலையில் நேற்று 3-வது வழக்கில் நீதிபதி அஞ்சு மீரா பிர்லா 48 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.79 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த வழக்கிற்கான தண்டனைக் காலம் முந்தைய வழக்குகளின் தண்டனை காலம் நிறைவடைந்த பின்னரே தொடங்கும். அதன்படி 3 வழக்குகளில் குற்றவாளி மனுவிற்கு மொத்தம் 99 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே 4-வது வழக்கிலும் மனு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் அதற்கான தண்டனையும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.