நாசிக்
மராட்டியத்தில், பாலியல் தொல்லையை தடுத்த பெண்ணை 2 பேர் பைக்கில் 15 கி.மீ. துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டியத்தின் நாசிக் நகரில், நள்ளிரவில் காரில் வந்த பெண்ணிடம் 2 பேர் பாலியல் துன்புறுத்தல் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை துணிச்சலாக தடுத்த அந்த பெண் பின்னர் தன்னுடைய காரில் தப்பியுள்ளார்.
ஆனால் அவரை, அந்த 2 பேரும் விடாமல் பைக்கில் துரத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில், விரைவாக விரட்டி சென்று காரை நெருங்கினர். அப்போது, 2 பேரில் ஒருவர் கட்டைகளை எடுத்து அடுத்தடுத்து காரை நோக்கி வீசினார். இதில், காரின் கண்ணாடிகள் மீது கட்டைகள் விழுந்தன.
ஏறக்குறைய 15 கி.மீ. தொலைவுக்கு பைக்கில் விரட்டி சென்றுள்ளனர். இந்த காட்சிகள் காரில் இருந்த கேமராவில் வீடியோவாக பதிவாகி உள்ளது. இதுபற்றி போலீசார் கூறும்போது, நள்ளிரவில் காரில் சென்ற பெண்ணிடம் 2 பேர் தவறாக நடக்க முயன்றனர். அதனை தடுத்து, காரில் தப்பிய பெண்ணை பைக்கில் பின்தொடர்ந்து சென்று தாக்கினர்.
சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, சில மணிநேரத்தில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காரை மறித்து, அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்தனர்.
அவர்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் முயற்சி, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், வேறு 7 பேருக்கும் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.