தேசிய செய்திகள்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வீட்டின் உரிமையாளர் கைது

அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற மாணவியை வீட்டில் இருந்து வெளியே செல்ல விடாமல் கையை பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் கமலேஷ் குமார் திட்டியுள்ளார்.

அசோக்நகர்,

பெங்களூருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 60 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கல்லூரி மாணவி

பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கமலேஷ் குமார் (வயது 60). இவரது வீட்டின் மாடியில் 20 வயது இளம் பெண் ஒருவர் வாடகைக்கு வசித்து வருகிறார். அந்த இளம் பெண் பெங்களூருவில் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் மாணவி வசித்து வந்த வீட்டில், தண்ணீர் குழாய்கள் பழுதாகி இருந்தது. அதனை சரிசெய்ய பலமுறை கமலேஷ் குமாரிடம், மாணவி கூறியிருந்தார். இதனை சரிசெய்ய நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மாணவி வீட்டில் இருந்தபோது கமலேஷ் குமார் சென்றார்.

பாலியல் தொல்லை

அப்போது மாணவியிடம் படிப்பு மற்றும் குடும்பத்தை பற்றி விசாரித்துள்ளார். பின்னர் மாணவி கையில் மருதாணி வைத்திருப்பதை பார்த்து, அதை ரசிப்பது போன்று கையை பிடித்த கமலேஷ் குமார் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அப்போது அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற மாணவியை வீட்டில் இருந்து வெளியே செல்ல விடாமல் கையை பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் கமலேஷ் குமார் திட்டியுள்ளார். பின்னர் அவரை கீழே தள்ளிய மாணவி, வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

பின்னர் இதுகுறித்து உடனடியாக அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று காலையில் கமலேஷ் குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.