சிறுமி 
தேசிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

தனக்கு நேர்ந்த அந்த கொடுமையை கூறி சிறுமி பெற்றோரிடம் கதறி அழுதார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஓணம் திருவிழா முடிந்து இரவு நேரத்தில் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்ட 14 வயது சிறுமிக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோவில் பயங்கரம்

காசர்கோடு மாவட்டம், சீமேனி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஓணம் திருவிழா நிகழ்ச்சியில் 14 வயது சிறுமி ஒருவர் பங்கேற்றார். நிகழ்ச்சி அனைத்தும் முடிந்ததும், இரவு நேரத்தில் அந்த சிறுமி தனது வீட்டிற்குப் புறப்பட்டார்.அப்போது அவர் அந்த பகுதியில் நின்ற ஒரு ஆட்டோவில் ஏறித் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். இரவு நேரம் என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது.

பாலியல் தொல்லை

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த ஆட்டோ டிரைவர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஆட்டோவை செலுத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்துள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த சிறுமி

ஆட்டோ டிரைவரின் இந்த செயலால் நிலைகுலைந்து போன அந்த சிறுமி, கடுமையான பயத்துடனும் நடுக்கத்துடனும் வீடு வந்து சேர்ந்தார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பயம் மற்றும் அவமானம் காரணமாக அவர் ஆரம்பத்தில் யாரிடமும் கூறாமல் மெளனமாக அழுதுள்ளார்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த சிறுமியின் அன்றாட செயல்பாடுகளில் திடீர் மாற்றம் கண்ட அவரது குடும்பத்தினர், சந்தேகமடைந்து அன்போடு விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த அந்த கொடுமையை கூறி சிறுமி பெற்றோரிடம் கதறி அழுதார்.

ஆட்டோ டிரைவர் கைது

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் நஜாண்டாடி கிராமத்தைச் சேர்ந்த ஷாஜி (வயது 30) என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஷாஜியை போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் ஷாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு அவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.